×

பெரியார் சிலை மீது காவி சாயம் பூசி அவமதிப்பு: கோவையில் வாலிபர் கைது

கோவை: கோவை சுந்தராபுரத்தில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். கோவை பொள்ளாச்சி ரோடு சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை உள்ளது. நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக குனியமுத்தூர் போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். அதற்குள், தி.மு.க., தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் பெரியார் ஆதரவாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சிலை முன்பு குவிந்தனர். அப்போது, ‘சிலை மீது காவி சாயம் பூசி பெரியாரை அவமதித்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை உடனே கைது செய்ய வேண்டும்’ என கோஷங்கள் எழுப்பினர்.

சிறிதுநேரத்தில் போலீசார் வந்து சிலையை பார்வையிட்டு விசாரித்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலை மீது காவி சாயம் பூசி சென்றுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசாரிடம் அரசியல் கட்சியினர், உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாக்குவாதம் செய்தனர். இதன்பின், குனியமுத்தூர் போலீசார்  பொது அமைதியை சீர் குலைத்தல், கலகம் விளைவித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்தனர். பின்னர், அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, போத்தனூர் அண்ணாநகரை சேர்ந்த அருண்கிருஷ்ணன் (21) என்பவர்  போத்தனூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்தனர். அருண்கிருஷ்ணன், பாரத் சேனா அமைப்பை சேர்ந்தவர் என்று தெரிகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த கீழையூரில் தரைப்பாலம் அருகே உள்ள பெரியார் சிலையும் நேற்று அவமரியாதை செய்யப்பட்டது. இதை கண்டித்து திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தலைவர்கள் கடும் கண்டனம்: பெரியார் சிலை அவமதிப்பு செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வைகோ(மதிமுக பொது செயலாளர்): பெரியார் சிலை தொடர்ந்து குறிவைத்துத் தாக்கப்படுகிறது என்பதை தமிழக அரசு இனியாவது உணர்ந்து தக்க நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.  ராமதாஸ் (பாமக நிறுவனர்): பெரியாரின் சிலை மீது சில நச்சுக்கிருமிகள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.  முத்தரசன்(இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்):- பெரியார் சிலை அவமதிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து, அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும்.

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்): கருத்துக்களை கருத்துக்களால் மோத வேண்டுமே, தவிர இத்தகைய இழி செயல்கள் மூலம் பெரியாரின் கருத்துக்களை மறைத்துவிட முடியாது. திருமாவளவன்(விசிக தலைவர்): குற்றவாளிகளைப் பயங்கரவாதிகளாக கருதி பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இவ்வாறு தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல், டிடிவி.தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி தலைவர்), நடிகர் சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி தலைவர்) உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்: மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கருத்து
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில் தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார். தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார். அதனால் அவர் பெரியார். சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.



Tags : Coimbatore ,Periyar , Periyar statue, saffron dye, Coimbatore, Valipar arrested
× RELATED யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை